க்ரைம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே விஷம் வைத்து கொல்லப்படும் மயில்கள்: குரும்பட்டி கிராமத்தில் 12 மயில்களை கொன்றவர் கைது

செய்திப்பிரிவு

ஆலங்காயம் அருகே கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மயில்களை விஷம் வைத்து கொத்து, கொத்தாக கொல்லும் சம்பவம் தொடர்கிறது. குரும்பட்டி கிராமத்தில் 12 மயில்களை விஷம் வைத்து கொன்றதாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. ஆண்டியப்புனூர், பூங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் மட்டும் மயில்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறதுது. சமீப நாட்களாக அருகில் உள்ள விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் பயிர்களையும் சேதப்படுத்தி யுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

காலை நேரத்தில் கூட்டம், கூட்டமாக வரும் மயில்கள் நெல், கம்பு, சோளம், தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். வனப்பகுதியையொட்டி குறைந்த பரப்பு விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள், மயில்களின் தொடர் தாக்குதலால் நிலை குலைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட 17 மயில்கள்

ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை கிராமத்தில் விஷம் வைத்து 5 மயில்களை கொன்றதாக ரமேஷ் (46) என்ற விவசாயியை வனத்துறையினர் கடந்த மாதம் 5-ம் தேதி கைது செய்தனர். தற்போது, ஆலங்காயம் அருகேயுள்ள குரும்பட்டி கிராமத்தில் நெற் பயிர்களை சேதப்படுத்தியதாக 12 மயில்களை விஷம் வைத்து கொன்றதாக விவசாயி சண்முகம் (75) என்பவரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இவர், சாவித்ரி என்பவரின் 75 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டு வந்துள்ளார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற் பயிர்களை மயில்கள் கூட்டமாக வந்து தினசரி சேதப்படுத்துவதால் வயல் வரப்புகளில் விஷம் தடவிய நெல் மணிகளை கொட்டி வைத்துள்ளார். வழக்கம்போல் நேற்று காலை இரை தேடி வந்த மயில்கள் விஷம் தடவிய நெல் மணிகளை தின்றதில் 12 மயில்கள் அந்த இடத்திலேயே இறந்துவிட்டன. இறந்த மயில்களை சண்முகம் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றுள்ளார். அதற்குள், ரகசிய தகவலின்பேரில் ஆலங்காயம் வனத்துறையினர் விரைந்து சென்று கொல்லப்பட்ட 12 மயில்களின் உடல்களை மீட்டதுடன் சண்முகத்தையும் கைது செய்தனர்.

உரிய இழப்பீடு

ஆலங்காயம் வனச்சரகர் சண்முகசுந்தரம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘மயில்கள் பாதுகாப்புடன் வசிப்பதற்கான பகுதியாக இந்த வனப்பகுதி உள்ளது. அடர்த்தியான மரங்கள் நிறைந்த வனப்பகுதியில், வெப்பநிலையும் குறைவாக இருப்பதால் மயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளன. எங்கள் கணக்குப்படி 100-க்கும் மேல் மயில்கள் உள்ளன. மயில்கள் தேசிய பறவை என்பதுடன் பாதுகாக்கப்பட்ட முதல் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இதனால், மயிலை கொன்றால் கண்டிப்பாக சிறை தண்டனைதான். மயில்களால் பயிர்ச்சேதம் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கெனவே கிராம விழிப்புணர்வு கூட்டங்களில் நாங்கள் தெரிவித்து வருகிறோம். மயில் மட்டுமில்லாமல் பிற வன விலங்குகளையும் கொல்லக்கூடாது என கூறி வருகிறோம். ஆலங்காயத்தில் மயில்களை கொன்றதாக இதுவரை 2-வது வழக்கு பதிவாகியுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT