திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் சீரோ மலங்கரா டயோசீசனுக்கு சொந்தமான 300 ஏக்கர்இடம் உள்ளது. இங்கு விவசாயப் பணிகளை மேற்கொள்ள கோட்டயத்தைச் சேர்ந்த மனுவல்ஜார்ஜ் என்பவருக்கு கடந்த2019-ல் டயோசீசன் சார்பில் 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது.
ஆனால், எம்.சாண்ட்க்கு பதிலாக அனுமதி பெற்ற மனுவல்ஜார்ஜ், அருகில் இருந்த ஆற்றுமணலை அளவுக்கு அதிகமாக எடுத்து கடத்தியதாக புகார்கள்எழுந்தன. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அப்போதைய சேரன்மகாதேவி சார்ஆட்சியர் பிரதீப் தயாள் ரூ.9.50கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். மனுவல் ஜார்ஜ் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா சீரோ மலங்கரா கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் சாமுவேல் மார் ஏரேனியஸ்(69), மறைமாவட்ட முதன்மைகுரு ஷாஜி தாமஸ்(58), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56), ஜிஜோ ஜேம்ஸ்(37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலாயில் (53) ஆகிய 6 பேரையும் சிபிசிஐடி போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில்சேரன்மகாதேவி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரை, சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக குமார் பொறுப்பு வகிக்கிறார். இவரது மனைவி பூங்கோதை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகிக்கிறார்.