சைபர் கிரைம் மோசடி அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். தொகை மோசடியாக எடுக்கப்பட்டால், 1930 என்ற எண் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, வங்கிகளுக்கு நேரடியாக சென்றுவந்த நிலை மாறி, தற்போது ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. செல்போனுக்கு குறுந்தகவலை அனுப்பி அதில் கேட்கப்பட்டுள்ள வங்கி சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்ய கூறியும், ஓடிபி எண்ணை பெற்றும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும் பல்வேறு வகைகளில் மர்மநபர்கள் சைபர் கிரைம் குற்றங்களை அரங்கேற்றி வருகின்றனர். சமீப நாட்களாக கோவையில் சைபர் கிரைம் மோசடி குறித்த புகார்கள் குவிந்து வருகின்றன.
இதுதொடர்பாக, கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது: மர்மநபர்கள் மோசடியாக தங்களது வங்கிக் கணக்கில் இருந்து தொகையை திருடிவிட்டால், உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் திருடப்பட்ட தொகையை மீட்க வாய்ப்புள்ளது. ஏடிஎம் அட்டையின் ‘பின்’ நம்பரை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறியோ, ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்றோ, கிரெடிட் அட்டைகளில் ரிவார்டு புள்ளிகள் அதிகரிப்பு, புதிய ஏடிஎம் அட்டைகள் வழங்குவது, ஏடிஎம் அட்டைகளை ஆக்டிவேட் செய்து தருவதாக கூறுவது என செல்போன் மூலம் அழைத்து வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி எண் ஆகியவற்றை கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. வங்கிக் கணக்கு முடக்கப்படும், ஏடிஎம் அட்டை புதுப்பிக்கப்படும், பரிசு விழுந்துள்ளது என பல்வேறு காரணங்களை கூறி குறுந்தகவலாகவும், மெயில் மூலமும் தகவல் அனுப்பி வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி எண் விவரங்களை கேட்டாலும் அதில் விவரங்களை பதிவிடக் கூடாது.
ஏடிஎம் அட்டைகளில் ரகசிய குறியீடுகளை குறித்து வைக்க கூடாது. வங்கிக்கணக்கு எண், அடையாளக் குறியீடுகளை செல்போனில் சேமித்து வைக்கக்கூடாது. ஆன்லைன் பேங்கிங், நெட்பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தும் போது, மூன்றாவது நபருக்கு பணம் அனுப்பும் அளவை, குறைந்த தொகையாக வைத்துக் கொள்ளலாம்.
முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் முன்பின் தெரியாதவர்களின் நட்பு அழைப்பை தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்களை சமூகவலைதளங்களில் பகிரக்கூடாது. ஆன்லைனில் இருக்கும்போது, எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத வெப்சைட்டுகள், லிங்க்குகளுக்குள் செல்ல வேண்டாம்.
வேலை தருவதாக கூறி முன்தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்துமாறு கூறினால் செலுத்த வேண்டாம். ஒஎல்எக்ஸ் செயலியில் கார், போன் போன்றவற்றை குறைந்த விலையில் விற்பதாக கூறி ஏதாவது ஒரு படத்தை பதிவேற்றி விளம்பரம் செய்து, முன்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தினால் தான் பொருளை காட்ட முடியும் என்றால், அதை நம்பி பணத்தை கட்ட வேண்டாம். செயலி மூலம் கடன் பெற அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம். என்று அவர்கள் கூறினர்.