ஈரோடு: ஈரோடு பங்களாபுதூர் அருகே காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட 38 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மதன்குமார். விவசாயி. இவர் தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில், தனது மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். மாலையில் தாடை கிழிந்து ரத்தம் கொட்டிய நிலையில் மாடு வீடு திரும்பியுள்ளது. காட்டுப்பன்றிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் அவுட் காய் எனப்படும் ஒருவகையான நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததால் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பங்களாபுதூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கொண்டப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மகேஷ்வரன் (37), எருமைக்குட்டையைச் சேர்ந்த நடராஜ் (59) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் அவுட் காய் எனப்படும் 38 நாட்டு வெடிகுண்டுகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.