சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பச்சைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுப்ரீம் (23). இவர் கடந்த 9-ம் தேதி இரவு கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராக்கிப்பட்டி பிரிவு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, காரில் வந்த ஒரு கும்பல் முகவரி கேட்பது போல் நாடகமாடி, சுப்ரீம் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியது. சுப்ரீம் உடனடியாக காரை தனது செல்போனில் போட்டோ எடுத்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸில் சுப்ரீம் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், கார் ஓட்டுநர் கார்த்திக் புதுச்சேரியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு அங்குள்ள போலீஸார் அவரை பிடித்து விசாரணை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீஸார் புதுச்சேரி சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.