வேலூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில், மாநில எல்லை சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் உமா தலைமையிலான காவலர்கள் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், பேருந்தில் பயணி ஒருவரின் பையை சோதனையிட்டதில், 20 கிலோ 500 கிராம் எடை கொண்ட கஞ்சா பார்சலை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் (32) என்றும் திருப்பூருக்கு கஞ்சா பார்சலை எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். அவரிடம், காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.