ஆரணியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி செய்த நகர அதிமுக செயலாளர், வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.மலை மாவட்டம் ஆரணியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய் துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வேலூர் மண்டல கூட்டுறவு துறை அதிகாரிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆய்வு செய்தனர். அதில், போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி நடைபெற்று இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், நகர அதிமுக செயலாளருமான அசோக்குமார், வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், உதவியாளர் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் உள் ளிட்டவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், உதவியாளர் சரவணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் மோகன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதேபோல், கண்காணிக்க தவறியதற்காக வங்கி மேலாண்மை இயக்குநர் கல்யாணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், கூட்டுறவு நிர்வாக குழு கலைக்கப்பட்டது. பொறுப்பில் இருந்தவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இது தொடர்பாக செய்யாறு துணை பதிவாளர் கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வணிக குற்ற புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்து நகர கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த நகர அதிமுக செயலாளர் அசோக்குமார், மேலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய உதவியாளர் சரவணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார்.