சேலத்தில் முகநூலில் பழகி ரூ.1.61 லட்சம் மோசடி செய்தவர் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் இரும்பாலை விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (54). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகநூல் மூலம் இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவருடன் நட்பு கிடைத்துள்ளது. அவர் இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க உள்ளதாகவும் அதில் சுரேஷை பங்குதாரராக சேர்ந்து கொள்ளவும், லாபத்தில் தலா 50 சதவீதம் இருவரும் பிரித்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு பின்னர் சுரேஷை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த நபர், “தான் டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து விட்டதாகவும், அதற்கு வரியாக ரூ.1.61 லட்சம் செலுத்த வேண்டும்” எனக் கூறி சுரேஷிடம் பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய சுரேஷ், செல்போனில் பேசியவரின் வங்கிக் கணக்கில் ரூ.1.61 லட்சத்தை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அவரை சுரேஷ் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சுரேஷ் சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
இதேபோல, சேலம் புதிய பேருந்து நிலையம் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (41). இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி அதில் ஃபேன்சி செல்போன் நம்பர்கள் இருப்பதாகவும், அந்த எண்கள் ஏலத்தில் விட இருப்பதாகவும் அதற்கு முன்தொகையாக ரூ.59 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய கனகராஜ், அவர் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ.59 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, கனகராஜ் சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இவ்விரு புகார்கள் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.