க்ரைம்

கோவையில் ஆன்லைன் மூலம் மூவரிடம் ரூ.5.08 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

கோவையில் ஆன்லைன் மூலம் மூவரிடம் மொத்தம் ரூ.5.08 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் ஆண்டனி ராஜேஷ். ஐ.டி நிறுவன ஊழியரான இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரில், ‘‘எனது செல்போன் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில், எனது வங்கி கணக்கு முடக்கப்படாமல் இருக்க அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதை நம்பி நான் விவரங்களை பதிவிட்டு, ஓடிபி எண்ணையும் பதிவிட்டேன். சிறிது நேரத்தில் எனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.25 லட்சம் தொகை எடுக்கப்பட்டது’’ எனக் கூறியுள்ளார்.

ஆவாரம்பாளையம்  ராயர் நகரைச் சேர்ந்த சுப்பையா(71) அளித்த புகாரில்,‘‘சித்தாப்புதூர் சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்துக்கு சென்றேன். அப்போது கணபதியில் உள்ள வங்கியில் பணியாற்றுவதாக கூறி ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை பெற்று, எனது கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 770 தொகையை திருடிவிட்டார்’’ எனக் கூறியுள்ளார்.

ராம்நகர் காளப்பன் வீதியைச் சேர்ந்த சம்பத்குமார்(29) அளித்த புகாரில்,‘‘வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, கிரெடிட் கார்டு விவகாரம் தொடர்பாக ஒருவர் என்னிடம் பேசினார். எனது வங்கி கணக்கு விவரங்களை பெற்று ரூ.75 ஆயிரம் தொகையை திருடிவிட்டார்” எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT