க்ரைம்

3 நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து நூதன முறையில் ரூ.12.93 லட்சம் மோசடி: கோவை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

கோவையில் மூன்று நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் மொத்தம் ரூ.12.93 லட்சம் தொகை மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதி மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்(51). இவர் மாநகர சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரில்,‘‘எனது செல்போன் எண்ணுக்கு கடந்த 4-ம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், எனது வங்கிக் கணக்கு இன்று முடங்கப்போவதாகவும், அதை சரி செய்ய கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுமாறும் கூறப்பட்டிருந்தது. அந்த லிங்கை திறந்து, வங்கிக் கணக்கு, பான்கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி எண்ணையும் பதிவிட்டேன். சிறிது நேரத்தில் எனது வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 706 தொகை எடுக்கப்பட்டது’’ எனக் கூறியிருந்தார்.

செல்வபுரத்திலுள்ள முத்துசாமி காலனியைச் சேர்ந்த சந்திரலேகா(30) அளித்த புகாரில்,‘‘எனது கணவரின் வங்கிக் கணக்கில் எனது செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பேசிய ஒருவர், எனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை தெரிவிக்குமாறு கூறினார். நானும் ஒடிபி எண்ணைக் கூறினேன். சிறிது நேரத்தில் வங்கிக்கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 980 தொகை எடுக்கப்பட்டது’’ எனக் கூறியுள்ளார்.

காளப்பட்டி திருமுருகன் நகரைச் சேர்ந்த துரைராஜ்(50) அளித்த புகாரில்,‘‘ எனது செல்போன் எண்ணுக்கு பான்கார்டு அப்டேட் செய்யுமாறு குறுந்தகவல் வந்தது. அதில் கேட்கப்பட்டிருந்த வங்கி கணக்கு, பான்கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி எண்ணை பதிவிட்டேன். சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் தொகை எடுக்கப்பட்டது’’ எனக் கூறியுள்ளார்.

மூன்று பேரிடமும் மொத்தம் ரூ.12.93 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT