கோவில்பாளையத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதால், இப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸாருக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - அன்னூர் சாலை, கோவில்பாளையம் கிரவுண்ட் சிட்டி நகரைச் சேர்ந்தவர் சுஜாதா(50). இவரது மகன் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு டெல்லிக்குச் சென்றார். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், தினமும் சுஜாதாவின் வீட்டு வாசலில் மின் விளக்குகளை எரியவிட்டு வந்தனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் மின் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் சுஜாதாவிடம் பேசியபோது, அவர் இன்னும் கோவைக்கு வரவில்லை எனத் தெரியவந்தது.
வீட்டுக்கு சென்று பார்த்தபோது, முன்பக்க கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை உடைத்து 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதேபோல, அதே பகுதியில் சண்முகம் மற்றும் கார்த்திக் வீடுகளின் பூட்டை உடைத்தும் திருட்டு முயற்சி நடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, அப் பகுதி மக்கள் கூறும்போது, ‘‘இப்பகுதியில் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் உள்ளது. சமீபத்தில் திருட்டு நடந்த வீடுகளின் அருகேயுள்ள கேமராவை ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்து, கையில் ஆயுதங்களுடன் மர்மநபர்கள் நடமாடுவது தெரியவந்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேரும் முன்னர், தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். கிரவுண்ட் சிட்டி நகர் மற்றும் இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.