சேலத்தில் 2 பேரிடம் செல்போனில் பேசி ரூ.94,275 மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் குகை அம்பலவாணசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (41). இவரிடம் கடந்த 3-ம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர், நீங்கள் வைத்துள்ள கிரெடிட் கார்டுக்கு தொகை கூடுதலாக தருவதாக கூறி, கார்டில் உள்ள ரகசிய எண் மற்றும் ஓடிபி எண்ணை பெற்றுள்ளார்.
சிறிது நேரத்தில் நாகராஜின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.
இதேபோல, சேலம் வீராணம் அருகே உள்ள வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (45). பூ வியாபாரி. இவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பூக்களின் போட்டோக்களை அனுப்பி மொத்தமாக பூக்களை குறைந்த விலையில் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரிடமிருந்து பூ வாங்க அவர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.49,275 பெருமாள் அனுப்பி உள்ளார்.
அதன் பின்னர் அந்த செல்போன் எண்ணை பெருமாள் தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.