அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான போலீஸார், கோடாலிகருப்பூர் பகுதியில் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். சிலர் கொள்ளிடம் ஆற்று பாலம் அருகே சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவலர்கள் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பாண்டித்துரை(40), வீரமணி(43), தங்கராசு(30), அவரது சகோதரர்(தம்பி) முருகன்(25), அருள்மணி(31) ஆகியோர் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு காத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்து தா.பழூர் காவல் நிலையத்தில் உள்ள சிலையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் கொள்ளை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.