திருப்பூர் யூனியன் மில் சாலை கேபிஎன் காலனி 3-வது வீதியிலுள்ள நகை விற்பனை மற்றும் அடகுக் கடையில் ரூ.2.10 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் திருப்பூர் அழைத்துவரப்பட்டனர்.
இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், திருப்பூர் ரயில் நிலையம் வந்து திருவனந்தபுரம் - சென்னை செல்லும் ரயிலில் தப்பிச்சென்றதை சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்டறிந்தோம். தனிப்படையினர், தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து நடத்திய விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் மைசூரில் இருந்து சென்னை வழியாக பிஹார் மாநிலத்திலுள்ள தர்பங்காவுக்கு செல்லும் ரயிலில் தப்பிச்சென்றது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாநகரக் காவல் ஆணையரகம் மூலமாக, மேற்குறிப்பிட்ட ரயில் கடந்து செல்லும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும், மகாராஷ்டிரா மாநிலம் பல்லார்ஷா ரயில் நிலையத்தில் பிடிபட்டனர்.
திருப்பூர் மாநகர தனிப்படையினர் பல்லார்ஷா சென்றடைந்து, பிஹார் மாநிலம் பாக்தஹராவை சேர்ந்த மகதப் ஆலம் (27), முகமது சுபான்(30), காம்டியாவை சேர்ந்த பத்ருல் (20), திலகஸ் (20) ஆகியோரை கைது செய்து, மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், திருப்பூர் அழைத்து வந்துள்ளனர். இவர்கள், வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டனரா, கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரிக்க உள்ளோம்.
திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களிலும் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஏற்கெனவே ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாநகரில் 442 இடங்களில் 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என்றார்.
சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடிக்க உதவிய ரயில்வே பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு ரயில்வே போலீஸார், திருப்பூர் மாநகர தனிப்படையினர் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினருக்கு மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு பாராட்டு தெரிவித்தார்.