செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஆட்சியர் பெயரில் முகநூல் பக்கத்தில் போலியான கணக்கைத் தொடங்கி மோசடி செய்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆட்சியர், காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் பெயரில் முகநூல் கணக்கை போலியாக உருவாக்கி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் செங்கை ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய முகநூல் கணக்கில் இருந்து புகைப்படத்தை எடுத்து, தனது பெயரில் போலியான கணக்கை உருவாக்கி தன்னுடைய நண்பர்களிடம் பணம் கேட்டதாக புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து காவல் ஆய்வாளர் சிவகுமார் , காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன், காவலர்கள் கலைவாணன், மெகபூப் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் இக்குற்றத்தை செய்தவர் சிறுவன் என தெரியவந்ததால் அவரைக் கைது செய்த போலீஸார் செங்கல்பட்டு மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.