திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வடமாநில இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக ஊராட்சித் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ஆகவே, இத்தொழிற்சாலையில் உள்ளூர் பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்த வேண்டும் எனக் கோரி, கீழச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்தீஷ், பிரபு ஆகியோர் தொழிற்சாலை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இச்சூழலில், கீழச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, பேரம்பாக்கத்தில் தங்கியிருந்த ஒப்பந்த ஊழியர்களான வடமாநில இளைஞர்களை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அப்துல்அசின் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்தார்.
இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மப்பேடு போலீஸார், முத்தீஷ், பிரபு, தினேஷ், சிமியோன், திவாகர், ராஜேஷ், தினேஷ், சூர்யா, முகேஷ், பிரகாஷ், ஸ்டீபன் ஆகிய 11 பேரைக் கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக, தலைமறைவாக இருந்த கீழச்சேரி ஊராட்சித் தலைவி தேவிகலா மகன் தேவா என்கிற தேவஆரோக்கியம்(25) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர்.