ஆவுடையார்கோவில் அருகே 2 பெண்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடை யார்கோவில் அருகே விளானூரைச் சேர்ந்தவர் பால்சாமி மனைவி பஞ்சவர்ணம் (47). இவர், கடந்த 2019 செப்.4-ம் தேதி ஆவுடையார்கோவிலில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக ரூ.3 லட்சம் பணத்துடன் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆவுடையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், குமுளூரைச் சேர்ந்த காளிமுத்து (38), விளானூரைச் சேர்ந்த சிவக்குமார் (42), இவருடன் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லிவின்பாய் (25) ஆகியோர், பஞ்சவர்ணத்தை கடத்திச் சென்று, அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு, அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் புதைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து காளிமுத்து, சிவக்குமார், லிவின்பாய் ஆகிய 3 பேரையும் ஆவுடையார்கோவில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த 2018-ல் குமுளூரைச் சேர்ந்த கனகம்மாளை (50) சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட விரோதத்தில் வெட்டிக் கொலை செய்ததுடன், தடயத்தை மறைப்பதற்காக வீட்டோடு உடலையும் சேர்த்து காளி முத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கிலும் காளிமுத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்விரு வழக்குகளிலும் நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார். அவர் அளித் தீர்ப்பு விவரம்:
கனகம்மாளை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். சிறையில் இருக்கும் தண்டனை காலத்தில் 18 மாதங்களில் மாதத்துக்கு 5 நாட்கள் வீதம் காளிமுத்து தனிமை சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பஞ்சவர்ணத்தை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்துக்கு 2 ஆயுள் சிறை தண்டனையும், 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சிவக்குமாருக்கு 2 ஆயுள் சிறை தண் டனையும், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதேபோன்று, லிவின்பாய்க்கு ஒரு ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, காளிமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் 3 கொலை வழக்கு கள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.