க்ரைம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.67.38 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

செய்திப்பிரிவு

கோவை ஆவாரம்பாளையத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் மேலாளர் ஜெயராம், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் 2019-ல் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், 2004 முதல் சலீவன் வீதியைச் சேர்ந்த கார்த்திக், வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். கணேசன் என்பவர் தனது பெயரில் 16 நகைக்கடன்களை இக்கிளையில் வைத்துள்ளார். கணேசன் அளித்த நகைகளை, மதிப்பீட்டாளர் கார்த்திக் உறுதி செய்து, அசல் நகை என்று சான்றளித்தார். அதன் அடிப்படையில் கணேசனுக்கு கடன் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கணேசன், நகைகளை எடுக்க வந்தபோது, அவரது அந்த நகைகள் போலியானது என தெரியவந்தது. தான் அளித்த அசல் நகைகளுக்கு பதில் போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளதாக, கணேசன் வாதிட்டார். இதையடுத்து மதிப்பீட்டாளர் கார்த்திக் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர் சரிபார்த்த 39 பாக்கெட்டுகளில் உள்ள நகைகளை எடுத்து சரிபார்த்தோம்.

அதில், 3,819 கிராம் அளவுக்கு போலி நகைகள் இருந்தது தெரியவந்தது. இதன்மூலம் ரூ.67.38 லட்சம், வங்கிக்கு இழப்பு ஏற்பட்டது. கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக போலி நகைகளை வைத்த வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்ததுது.

அதன் பேரில், போலீஸார் கார்த்திக் உள்ளிட்டோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், நீண்ட தேடுதலுக்கு பின்னர், தலைமறைவாக இருந்த கார்த்திக்கை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT