வேலூர்: ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் 5 கிலோ கஞ்சா கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுதவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில எல்லைகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவலர்கள் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று காலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்த அம்மாநில அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஒரு பையில் கஞ்சா பார்சலுடன் வந்த நபரை பிடித்தனர். விசாரணையில், சுமார் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பார்சலை கடத்தி வந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கஜபதி (50) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் கஞ்சா பார்சலை எங்கிருந்து வாங்கி யாருக்காக கடத்தப்படுகிறது என விசாரித்து வருகின்றனர்.