சென்னை: விவசாயத்துக்கு பயன்படுத்தும் யூரியாவை வைத்து போலி ஹெராயின் தயாரித்த போதைப் பொருள் கடத்தல்கும்பலைச் சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாதவரத்தில் ஹெராயின் எனப்படும் போதைப் பொருள் விற்பனை நடப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் கார்த்திகேயனின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கும்பலை கைது செய்ய தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 4 பேரை பிடித்துவிசாரித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர்கள் மதுரையை சேர்ந்த முகமது ஷபீன்அப்துல்லா (29), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை முத்துராஜா (40),அதே மாவட்டம் வெளிப்பட்டினம்தமீம் அன்சாரி (27), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தஅருண்குமார் (31) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1 கத்திமற்றும் யூரியா கலந்த 1 கிலோ போலிஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரையும் பெரியமேடு போலீஸாரிடம் தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர், 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: போதைப் பொருள் விற்பனைக்கு மூளையாக செயல்பட்டது முத்துராஜா.இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஹெராயின் கடத்திய வழக்கில் 9 மாதங்கள் சிறையில் இருந்து, பிறகு ஜாமீனில் வெளியேவந்துள்ளார். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் ஒரிஜினல் ஹெராயினை விற்று வந்துள்ளனர்.
சில நேரங்களில் யூரியாவை அரைத்து அதில் சில வேதிப் பொருட்களை கலந்து ஹெராயின் என்ற பெயரிலும் விற்று ஏமாற்றி வந்துள்ளனர். மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது யூரியாவுடன் வேதி பொருட்கள் கலந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து பேக்கிங் செய்து அனுப்பியது போல பொட்டலங்களை தயார் செய்துள்ளனர். கத்தாரில் வேலை செய்யும்சையது என்பவர், நண்பரை அனுப்பிஇந்த பொட்டலங்களை வாங்கிக் கொள்வதாக கூறியதன்பேரில் இந்தகும்பல் மாதவரம் வந்து காத்திருந்தபோதுதான் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் ஏற்கெனவே விவசாயத்துக்கு பயன்படுத்தும் யூரியாவை அரைத்து அதனுடன் உண்மையான ஹெராயினை சிறிதளவு கலந்து அதை ஒரிஜினல் ஹெராயின் என்று கூறி விற்று வந்துள்ளனர். கள்ளச்சந்தையில் உண்மையான ஹெராயின் விலை கிலோவுக்கு ஒரு கோடிக்கு மேல். ஆனால், இந்த கும்பல் யூரியாவுடன் சிறிதளவு ஹெராயின் கலந்துஅந்த கலவையை கிலோவுக்கு ரூ.15லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட யூரியாவுடன் வேதிப்பொருட்கள் கலந்த போதைப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இவர்களது பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.