திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவரின் அடகுக்கடை, நகைக்கடை ஒரேவளாகத்தில் உள்ளன. கடையின் பின்புறம் குடியிருந்த ஜெயக்குமார் சில நாட்களுக்கு முன்பு வேறு பகுதியில் குடியேறினார்.
இவர் தங்கியிருந்த வீடு காலியாகவே இருந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல கடையைதிறக்க வந்த ஜெயக்குமார்,கடையின் பூட்டு உடைக்கப்பட்ட தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த தங்கம் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது, தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஜெயக்குமாரிடம் விசாரித்தனர். கடையில் இருந்த 375 பவுன்நகை, 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்உதவியுடன் போலீஸார் விசாரணைமேற்கொண்டனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: திருப்பூர் யூனியன்மில் சாலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்தி, இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. காலியாக இருந்த வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்,நகைக் கடை மற்றும் அடகுக் கடைக்குள் புகுந்துள்ளனர்.
இப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 20 கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். மாநகர காவல்துணை ஆணையர் செ.அரவிந்த் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தெய்வமணி, கந்தசாமி, ஆனந்தன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.