தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சஞ்சீவன் (40). இவர் அண்மையில், மின்சாரத்தில் இயங்கக் கூடிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்க திட்டமிட்டு ஆன்லைன் மூலம் ரூ.499 முன்பணம் செலுத்தி வாகனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு புதிய செல்போன் எண்ணில் இருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய நபர், இ-ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், சஞ்சீவன் பெயரில் பதிவு செய்யப்பட்ட புதிய வாகனம் உரியவருக்கு அனுப்பி வைத்திட தயார் நிலையில் இருப்பதாகவும், அதற்கு முன்பாக வாகனத்தின் முழு தொகையான ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 790-ஐ செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை நம்பி சஞ்சீவன் அந்த தொகையை இணைய வங்கி சேவை மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு வாகனம் வந்து சேராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்துள்ளார். இதுகுறித்து தருமபுரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.