கோவை குனியமுத்தூர் அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பாரூக்(51). இவர், கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அளித்த புகார் மனுவில், “முகநூல் மூலம் அறிமுகமான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண், தான் நடத்தி வரும் ஜவுளிக்கடைகளுக்கு தேவையான துணிகளை வாங்க இங்கிலாந்து நாட்டு தொகையை பார்சல் மூலமாக அனுப்புவதாக தெரிவித்தார். நானும் சம்மதம் தெரிவித்தேன். பின்னர், பார்சல் மூலமாக பணத்தை அனுப்பி விட்டதாகவும், அதற்காக சுங்க வரி ரூ.14 லட்சத்து 200 செலுத்த வேண்டும் என்றார்.
சுங்க அதிகாரிகள் கேட்கும்போது அந்தத் தொகையை செலுத்தி பார்சலை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். பின்னர், மும்பை விமானநிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் பார்சலை எடுக்க, ரூ.14 லட்சத்து 200 லட்சம் தொகையை செலுத்துமாறு கூறி வங்கி கணக்கு எண்ணை அளித்தனர். நானும் செலுத்தினேன். அதன் பின்னர், நீண்ட நாட்கள் ஆகியும் எனக்கு பார்சல் வரவில்லை. அப்பெண்ணின் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் நான் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸார் மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.