திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கட்டிப்பூண்டி கிராமத்தில் வசித்தவர் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜகோபால்(65). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை, அதே பகுதியில் வசிக்கும் காசி என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
பின்னர் அவர், ராஜகோபாலுக்கு சொந்தமான நிலத்தை, போலி பத்திரம் மூலம், தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராஜகோபால், கடந்த 2007-ல் மாயமானார்.
தந்தை மாயமானது குறித்து மகன் கலைச்செழியன் கொடுத்த புகாரின் பேரில் போளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கின் மீதான விசாரணையின் முன்னேற்றம் இல்லாததால், கலைச்செழியன் தொடர்ந்த வழக்கில், சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2008-ல் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், நிலத்தை அபகரிப்பதற்காக ராஜகோபாலை கொலை செய்து, உடலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு பாலத்தின் கீழே புதைத்திருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் காசி, அவரது மகன் பாலமுருகன், ரெண்டேரி பட்டில் வசிக்கும் ஏழுமலை, மாட்டுப்பட்டில் வசிக்கும் சீனுவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் தந்தை, மகன் உட்பட 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி திருமகள் தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், பாலமுருகனுக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும், மற்ற 3 பேருக்கும் ரூ.16.500 அபராதம் விதித்துள்ளார். இதைத்தொடர்ந்து 4 பேரும், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.