புதுச்சேரி திப்புராயப்பேட்டை யைச் சேர்ந்த 17 வயது சிறுமி புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வம்பாகீரப்பாளையம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த முகேஷ் (22) என்பவர் அந்த மாணவியை காதலிக்க சொல்லி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த மாணவி அதனை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி வம்பாகீரப்பாளையம் செஞ்சி சாலை சந்திப்பில் உள்ள ஜெராக்ஸ்கடையில் பாடம் சம்மந்தமாக ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது மாணவியை பின்தொடர்ந்து சென்ற முகேஷ், ‘ஏன் என்னை காதலிக்க மாட்டேன் என்கிறாய்!’ என கேட்டு, கையால் தலையில் தாக்கியுள்ளார்.
பின்னர் தலையை பிடித்து, சுவற்றில் மோதியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன் றுள்ளார்.
மாணவி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து முகேஷ் கத்தியை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடியுள்ளார். காயமடைந்த மாணவி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து முகேசை தேடி வருகின்றனர்.