தூத்துக்குடி: துபாயில் இருந்து பேரீச்சம்பழப் பெட்டிகளுக்கு நடுவே பதுக்கிவைத்து கொண்டுவரப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான சிகரெட்களை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக அவ்வப்போது செம்மரக்கட்டைகள், போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து தூத்துக்குடிக்கு வரி ஏய்ப்பு செய்யும் வகையில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக பெங்களூருவைச் சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அவர்கள் தூத்துக்குடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். துபாய் நாட்டில் உள்ளஜபல்அலி துறைமுகத்தில் இருந்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ஒரு சரக்கு பெட்டகம் வந்தது. அதில் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சரக்கு பெட்டகத்தை சந்தேகத்தின்பேரில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தினர். முதல் 2 அடுக்குகளில் பேரீச்சம் பழப் பெட்டிகள் இருந்தன. அதன் பின்புறம் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
உடனடியாக அதிகாரிகள் சிகரெட் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.20 கோடி. சிகரெட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சுமார் 160 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதேபோன்று, சிகரெட் லேபிளில் விதிமுறைகளின் படி பல்வேறு விவரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்கவே சிகரெட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.