பிரகாஷ் 
க்ரைம்

சேலம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் கைது

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய நீதிமன்ற அலுவலக உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் பொன்பாண்டி (45). நேற்று காலை நீதிமன்றம் வந்த மாஜிஸ்திரேட், அவரது அறையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் (37), மாஜிஸ்திரேட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்கள் பிரகாஷை பிடித்து அஸ்தம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர். மாஜிஸ்திரேட் பொன்பாண்டியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பணியிட மாற்றம்

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட பிரகாஷ் சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர். இவர் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர், மேட்டூர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் கேட்டிருந்த நிலையில், சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் பொன்பாண்டியிடம் முறையிட்டுள்ளார். இதற்கு அவர், இடமாறுதல் குறித்து மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாஜிஸ்திரேட்டை குத்தியுள்ளார். இதில், அவரது மார்பில் காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பொன்பாண்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

இதனிடையே, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மாஜிஸ்திரேட் அலுவலகம் வந்து விசாரணை செய்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT