கலசம் திருடப்பட்ட விருதாம்பிகை அம்மன் சன்னதி கோபுரம். 
க்ரைம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்க முலாம் பூசிய கோபுரக் கலசங்கள் திருட்டு

செய்திப்பிரிவு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க மூலாம் பூசிய கோபுரக் கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. புதிதாக புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் 6-ம் தேதி இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் உள்ள 5 கோபுரங்களிலும் கலசங்கள் உள்ளன. இதில், மூலவர் மற்றும் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரங்களில் மட்டும் குடமுழுக்கை ஒட்டி தங்க முலாம் பூசிய கலசங்கள் வைக்கப்பட்டன. அந்த வகையில் கோயில் வடக்கு கோபுர வாயில் பக்கம் உள்ள விருதாம்பிகை அம்மன் சன்னதியின் கோபுரக் கலசத்தில், பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசிய 3 கலசங்கள் மாயமாகியிருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 14 லட்சம் ஆகும்.

கோயில் செயல் அலுவலர் மாலா அளித்தப் புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இக்கோயில் கலசத்தைத் திருடிய நபர்கள், கோபுரத்தின் மீது எவ்வித சேதாரமும் ஏற்படுத்தாமல் அப்படியே கழற்றிச் சென்றிருப்பதால், இதை பொருத்தும் முறையை நன்கு அறிந்தவர்களே இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

பக்தர்கள் அதிர்ச்சி

குடமுழுக்கு நடைபெற்று ஒரு மாதம் கூட பூர்த்தியாகாத நிலையில் தங்க மூலாம் பூசப்பட்ட கோபுர கலசம் திருடப்பட்டிருக்கும் சம்பவம் விருத்தாசலம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இக்கோயிலில் கடந்த 2002-ம் ஆண்டு குடமுழுக்கு முடிந்த சில மாதங்களில் அர்த்தநாரீஸ்வரர் சிலை மாயமானது. பின்னர் அச்சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 2014-ம் ஆண்டு அச்சிலை மீட்கப்பட்டு, மீண்டும் தமிழகம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT