பாபநாசம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுசங்கத்தில் ரூ.34லட்சம் முறைகேடு செய்ததாகஅளிக்கப்பட்ட புகாரின்பேரில்,அந்த சங்கத்தின் செயலாளர், மருந்தாளுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்கு வீதியில் பாபநாசம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்தகம் அமைந்துள்ளது. இச்சங்கத்தின் செயலாளராக கும்பகோணம் கும்பேஸ்வரன் தெற்கு வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(56), மருந்தகத்தில் மருந்தாளுநராக தென்சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி(35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் 1.4.2017 முதல் 19.8.2019 வரை ரூ.34,41,761 அளவுக்கு மருந்து கொள்முதல், இருப்பு குறைவு மற்றும் தானிய அடமானக் கடன் வசூலில் முறைகேடு செய்திருப்பதாக கண்டறியப்பட்டது.
துணைப் பதிவாளர் புகார்
இதுகுறித்து கும்பகோணம் கூட்டுறவு துணைப் பதிவாளர் அட்சயபிரியா அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கூட்டுறவு சங்கச் செயலாளர் ராஜேந்திரன், மருந்தாளுநர் ராஜேஸ்வரி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைகளில் அடைத்தனர்.