ராம்பிரபு ராஜேந்திரன் 
க்ரைம்

ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருவதாக மோசடி: கிருஷ்ணன்கோவில் பாஜக பிரமுகர் கைது

செய்திப்பிரிவு

ரூ.1 லட்சம் கொடுத்தால் ஓராண்டில் ரூ.1 கோடி தருவதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.10 கோடி தருவதாகவும் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் ஒருவர் விருதுநகரில் கைது செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் முகமது தமீம்பேக் (32). தனது நண்பர் பாலமுருகன் என்பவர் மூலம் விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராம்பிரபு ராஜேந்திரனிடம் அறிமுகம் ஆகி உள்ளார்.

பின்னர், கிருஷ்ணன்கோவிலில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ராம்பிரபு ராஜேந்திரனை முகமது தமீம்பேக் சந்தித்தபோது, தன்னிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருந்ததாகவும், அதனை ஆஸ்திரேலிய இரிடியம் நிறுவனத்துக்கு இந்திய அரசு உதவியுடன் விற்றதாகவும் தன்னிடம் ரூ.1 லட்சம் கொடுத்தால் ஓராண்டில் ரூ.1 கோடியும், ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.10 கோடியும் தருவதாகக் கூறியதாக தெரிகிறது.

இதை நம்பி ராம்பிரபு ராஜேந்திரனிடம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.5 லட்சம் ரொக்கமாகவும், ரூ.5 லட்சத்தை ராம்பிரபு ராஜேந்திரனின் வங்கிக் கணக்கிலும் அதைத் தொடர்ந்து ரொக்கமாக ரூ.10 லட்சமும் முகமது தமீம்பேக் கொடுத்துள்ளார். பின்னர், சில மாதங்கள் கழித்து முகமதுதமீம் பேக் பணத்தை திருப்பிக் கேட்டபோது ராம்பிரபு ராஜேந்திரன் கால தாமதம் செய்து வந்துள்ளார்.

அதன்பின், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் பார்த்து பணத்தை திருப்பிக் கேட்க முயன்றபோது, அவரை முகமது தமீம்பேகால் சந்திக்க முடியவில்லை. பல இடங்களில் விசாரித்தபோது இதேபோன்று பலர் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தது தெரியவந்தது.

இந்நிலையில், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் முகமது தமீம்பேக் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து ராம்பிரபு ராஜேந்திரனை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT