சென்னை: சென்னை திருமுல்லைவாயில் பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர், சென்னை காவல் ஆணையரிடம் அண்மையில் புகார் மனு அளித்தார்.
அதில், ‘எனது நிறுவனத்தில் சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்த ஆர்.கே.பாஸ்கர்(39) என்பவர் பங்குதாரராக உள்ளார். இவரும், நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த பெரம்பூர் காமேஷ்குமாரும்(42) சேர்ந்து, வங்கி காசோலைகளில் எனது கையெழுத்தை போலியாகப் போட்டு ரூ.1 கோடியே 9 லட்சம் மோசடி செய்துள்ளனர். எனவே, மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தலைமறைவாக இருந்த ஆர்.கே.பாஸ்கர், காமேஷ்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.