க்ரைம்

வில்லியனூர்: கூரியர் நிறுவன ஊழியர் கொலையில் முக்கிய கொலையாளி கைது

செய்திப்பிரிவு

வில்லியனூர் அருகே அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனுவாசன் (எ) மூர்த்தி (31). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 21-ம் தேதி வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலை சேந்தநத்தம் சுடுகாட்டில் உள்ள சிமெண்ட் தரையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சீனிவாசன் சேந்தநத்தம் சாராய கடைக்கு மது குடிக்க சென்ற போது, சீனிவாசனை 2 பேர் தனியிடத்திற்கு அழைத்துச் சென்று சாராய பாட்டிலால் குத்தியும், உருட்டுக்கட்டையால் அடித்தும் பணத்தைபறித்து விட்டு தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வில்லியனூர் நவ சன்னதி வீதியைச் சேர்ந்த சஞ்சீவி (22) என்பவரை போலீஸார் முதலில் கைது செய்தனர். முக்கிய கொலையாளியான சேந்தநத்தம் பகுதியைச் சேர்ந்த புகழரசன் (22) என்பவரை சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆற்றங்கரையோரம் பதுங்கியிருந்த புகழரசனை கண்டறிந்த தனிப்படை போலீஸார் அவரை பிடிக்க முற்பட்டனர். அப்போது போலீஸாரை கண்ட புகழசரன் தப்பியோட முயன்றார். அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரைப் பிடித்த போலீஸார், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்துஅவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT