ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலானாய்வு பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏர்அரேபியா விமானத்தில் நேற்று வந்த கோவையைச் சேர்ந்த உமா (34), கடலூரைச் சேர்ந்த பி.பாரதி (23), தஞ்சாவூரைச் சேர்ந்த திருமூர்த்தி (26), திருச்சியைச் சேர்ந்த பி.விக்னேஷ் கணபதி (29) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முட்டி கேப், ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து அவர்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2.59 கோடி மதிப்பிலான 4.90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரையும் கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.