தேவகோட்டையில் திமுக பெண் கவுன்சிலரை கடத்திச் சென்றதாக அதிமுகவினர் மீது அவரது கணவர் போலீஸில் புகார் கொடுத் துள்ளார்.
தேவகோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக- 10, காங்கிரஸ்- 6, திமுக- 5, அமமுக- 5, சுயேச்சை- 1 வெற்றி பெற்றுள்ளன.
எந்த கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை கிடைக்காததால் தலைவர், துணைத் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
அமமுக ஆதரவோடு அதிமுக தேவகோட்டை நகராட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
அதேபோல் திமுகவும் நகராட்சியை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 19-வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை கவுன்சிலர் சுப்பிரமணி யனின் மனைவி ஞானம்மாள் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் 24-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.பிச்சையம்மாளை நேற்று கடத்தி சென்று விட்டதாக அதிமுகவினர் மீது அவரது கணவர் விக்னேஷ்வரன் தேவகோட்டை தாலுகா போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.