அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேஉள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவைச்சேர்ந்தவர் அறிவழகன்(36), வழக்கறிஞர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உடையார்பாளையம் பேரூராட்சியில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்குசுயேச்சையாக போட்டியிட்ட இலக்கியா பிரபு என்பவருக்கு ஆதரவாக அறிவழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அதேநேரம், வேறு ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக இருந்த அறிவழகனின் உறவினர்கள் சிலர், அறிவழகனின் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அறிவழகன் நேற்று காலை வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அறிவழகனை கத்தியால் குத்தியது. இதைக் கண்ட மக்கள் அறிவழகனைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், அறிவழகன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார், சடலத்தைகைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த கொலை குறித்து உடையார்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.