பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது: போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு கடந்த 14-ம் தேதி இளைஞர் ஒருவர் தன்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையின் இணை பொது மேலாளர் எனக் கூறிக்கொண்டு போலி அடையாள அட்டை மற்றும் முத்திரைகளை வைத்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பான புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையின் போலி அடையாள அட்டை மற்றும் முத்திரைகளை வைத்திருந்த அந்த இளைஞர் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த ராமன்(30). இவர், தினேஷ்குமார்(30), கிறிஸ்டோபர்(33), கார்த்திக்(32) ஆகியோருடன் சேர்ந்து, ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பல்வேறு பதவிகளில் பணி அமர்த்துவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சுமார் 130 பேரிடம் பணம் பெற்று, போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே ஏமாந்தவர்

இவர்களில், தினேஷ்குமார் கடந்த 2018-ம் ஆண்டு ஆவடி படை உடை தொழிற்சாலை பணிக்காக முன்பின் தெரியாத நபர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து போலி பணி நியமன ஆணை பெற்று ஏமாந்துள்ளார். ஆகவே, தினேஷ்குமார் தான் ஏமாந்த வழியிலேயே, நண்பர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போலீஸார் ராமன், தினேஷ்குமார், கிறிஸ்டோபர், கார்த்திக் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

SCROLL FOR NEXT