திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டையில் ஓடை பகுதியில் முனுசாமி என்பவர், பழமையான சிவன் கோயிலை மேம்படுத்திக் கட்டி, அங்கு சிறப்புப் பூஜைகளும், பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையும் அளித்து வருகிறார்.
இதனால், அக்கோயிலில் பொதுமக்கள் பலர் தங்கி, பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெற்றுச் செல்வதும், அங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்புப் பூஜை நடப்பதும் வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் அருகே உள்ள செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20); திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரி மாணவி. இவர், குழந்தை பேற்றுக்காகச் சாமியார் முனுசாமியிடம் சிகிச்சை பெறச் சென்ற தன் பெரியம்மா மகள் மகேஸ்வரியை பார்க்கக் கடந்த 13-ம் தேதி இரவு வெள்ளாத்துக்கோட்டை ஓடை சிவன் கோயிலுக்கு, தன் பெரியம்மாவுடன் சென்றார்.
ஹேமமாலினி அன்று இரவு கோயில் பூஜையில் பங்கேற்ற நிலையில், மறுநாள் காலையில் திடீரென விஷம் அருந்தினார். உடனே திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ஹேமமாலினியின் பெற்றோர் தன் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார், சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று ஹேமமாலினியின் பெற்றோர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம், தங்களது மகள் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, இறப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனு அளித்தனர்.
அம்மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.