விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(25). கணவனை இழந்த இவர், தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு கும்பல் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையை விலைக்கு வாங்கிச் சென்றது.
குழந்தையைக் காணவில்லை என்பதால் அருகில் வசிப்பவர்கள் சந்தேகத்தின்பேரில் சைல்டு லைனுக்கு தெரிவித்தனர். அதையடுத்து கலைச்செல்வியிடம் விஏஓ சுப்புலட்சுமி, சூலக்கரை போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது குழந்தையை ரூ.2.30 லட்சத்துக்கு ஒரு கும்பலிடம் விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து சூலக்கரை இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் எஸ்.ஐ.கள் கார்த்திகா, பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் திருமண புரோக்கர்களாக செயல்பட்ட கும்பல் ஒன்று குழந்தையை விலைக்கு வாங்கி மதுரையில் உள்ள குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றதும், இதில் மதுரை, கோவை, திருப்பூரைச் சேர்ந்த பலர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரைக்குச் சென்ற தனிப்படை போலீஸார் ஜெய்ஹிந்த்புரத்தில் குழந்தையை மீட்டனர்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் கலைச்செல்வி, தந்தை கருப்பசாமி, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகளான மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி, பிரியா, குழந்தையை விலைக்கு வாங்கி விற்ற மகேஸ்வரி, மாரியம்மாள், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கார் ஓட்டுநர்கள் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திக், செண்பகராஜன், புரோக்கர் நந்தகுமார் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து இரு சொகுசு கார்களையும், குழந்தையை விற்ற பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.