க்ரைம்

தஞ்சாவூர்: ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பேர் கைது; வாகனங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சாவை, தஞ்சாவூரில் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி உத்தரவின்பேரில், டெல்டா மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூரில் திருச்சி புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த மினி லாரியை தனிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், பிஹார் மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து இயந்திரம் ஒன்று பழுது பார்ப்பதற்காக தமிழகத்துக்கு கொண்டு வரப்படுவது தெரிய வந்தது. எனினும், சந்தேகத்தின்பேரில் தனிப்படையினர் இயந்திரத்தை முழுமையாகச் சோதனையிட்டனர். அப்போது, அதில் ரூ.1.25 கோடி மதிப்பிலான 250 கிலோ கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததும், அவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, கடத்தலில் தொடர்புடைய உசிலம்பட்டியைச் சேர்ந்த சுகபெருமாள், முத்துலிங்கம், மேட்டூரைச் சேர்ந்த வெள்ளையன், சக்திவேல், ஆந்திராவைச் சேர்ந்த னிவாசலு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கணபதி , சோபா நாகராஜன், திருவெறும்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான மினி லாரி, 4 கார்கள், மோட்டார் சைக்கிள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு கொண்டுவரப்படும் கஞ்சா, இங்கிருந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, வேதாரண்யம் ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட இருந்தது. ஆந்திராவில் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு வாங்கப்படும் கஞ்சா, இலங்கையில் ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இந்த கஞ்சா கடத்தலில் 3 குழுக்களாக செயல்பட்டவர்களை ஒரே நேரத்தில் பிடித்துள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT