தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த வாகனச் சோதனையின்போது, ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் கடத்த முயன்றது செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது. இதனுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காகத் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ.கயல்விழி உத்தரவின் பேரில், டெல்டா மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த மினி லாரியை தனிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பிஹாரில் உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து பழுது பார்ப்பதற்காகத் தமிழ்நாட்டுக்கு இயந்திரம் கொண்டு வரப்படுவது தெரிய வந்தது. என்றாலும் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படையினர் இயந்திரத்தை முழுமையாகச் சோதனையிட்டபோது, அதில் 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
மினி லாரியில் வந்தவர்களிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையின் மூலம் வேதாரண்யம், பட்டுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கஞ்சா பொட்டலங்களை வாங்கி, இலங்கைக்கு அனுப்பும் நபர்களும் பிடிபட்டனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்படும் இந்த கஞ்சா பொட்டலங்கள் வேலூர் வழியாகத் தமிழ்நாட்டுக்குள் வந்து நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடையிலிருந்து கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்படுவது தெரிய வந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு கிலோ ரூ.3,000 வீதம் வாங்கப்படும் இந்த கஞ்சா இலங்கை நபர்களிடம் ரூ.20,000 வீதத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கஞ்சா இலங்கையில் கிலோ ரூ.50,000 வீதத்துக்கு விற்கப்படுகிறதாம். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட இந்த கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.1.25 கோடி என்றும், வாகனங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆர்.சுகபெருமாள் (42), முத்துலிங்கம் (31), சேலம் மாவட்டம் மேட்டூரைச் எம்.வெள்ளையன் (29), எம்.சக்திவேல் (38), ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஸ்ரீனிவாசலு (30), விசாகப்பட்டினத்தை சேர்ந்த என். கணபதி என்கிற கோவிந்தா (27), வி.சோயா நாகராஜன் (31), திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சேர்ந்த ஜெ. ஜார்ஜ் பெர்னாண்டஸ் (27), அரியமங்கலத்தைச் சேர்ந்த முருகன் (28), திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரைச் சேர்ந்த ஆர்.ராஜா (43), ஜாம்பவானோடையைச் சேர்ந்த எஸ்.வீரகணேசன் (28), கே.செந்தில் (27), சென்னை தி.நகரைச் சேர்ந்த எஸ். உமா மகேஸ்வரன் (51), கம்பத்தைச் சேர்ந்த ராமன் (36) ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களைத் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ.கயல்விழி பார்வையிட்டு, கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார். அப்போது காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன் உடனிருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு இச்சம்பவத்தில் வாங்குபவர்கள் முதல் விற்பவர்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.