ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அதிகாலையில் டாக்டர் வீட்டுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள், டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 150 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு பங்களாவின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருடன் தப்பிச் சென்றனர்.
ஒட்டன்சத்திரத்தில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர்சக்திவேல்(52). இவர் ஒட்டன் சத்திரம் அருகே நாகனம்பட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக பங்களாவில் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.
நேற்று அதிகாலை சக்திவேல் பங்களாவின் பின்பக்கமாக கதவைஉடைத்துக் கொண்டு உள்ளே சென்ற முகமூடி அணிந்த மர்மநபர்கள், அறையில் தூங்கிக்கொண்டிருந்த டாக்டர் சக்திவேல், அவரது மனைவி ராணி, டாக்டரின் தாய், தந்தை ஆகியோரை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 150 பவுன் நகைகளை கொள்ளை அடித்தனர். பின்னர், வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த டாக்டரின் சொகுசு காரில் அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து டிஐஜி ரூபேஸ்குமார் மீனா, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, டாக்டர் சக்திவேல் வீட்டில் திருடிச் சென்ற காரை கொடைரோடு டோல்கேட் அருகே நாகையகவுண்டன்பட்டி பிரிவு சாலையில் கொள்ளயர்கள் நிறுத்திவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கொள்ளையர்கள் காரில் தடயம் ஏதும் விட்டுச் சென்றனரா எனச் சோதனை நடத்தினர். மோப்பநாய் சோதனையும் நடத்தப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.