கொலை மிரட்டல் புகாரில், சேலம் மாநகராட்சி 58-வது வார்டு அதிமுக வேட்பாளரை போலீஸார் கைது செய்தனர். இதை கண்டித்து, அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கே.பி.பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை அவரது வார்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கோபால் என்பவரின் உறவினர் சின்னு, அங்குள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வது தொடர்பாக பாண்டியனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாண்டியன் தன்னை தாக்கி விட்டதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சின்னு சிகிச்சைக்கு சேர்ந்தார். மேலும், இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாநகர காவல் உதவி ஆணையர் அசோகன் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை பாண்டியனை விசாரணைக்காக அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையம் முன்பு நேற்று மாலை 4 மணிக்கு திரண்டு அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், திமுக-வினர் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பும் அதிமுக-வினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதால், மாநகர காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பாண்டியன் மீது அன்னதானப்பட்டி போலீஸார் இபிகோ 294 B (ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் மற்றும் கைகளால் தாக்குதல்) மற்றும் இபிகோ 506 (கொலை மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை இரவு 7 மணியளவில் கைது செய்தனர்.
பொய் புகார்
இதுதொடர்பாக சேலம் தெற்கு தொகுதி எம் எல் ஏ பாலசுப்பிரமணியன் (அதிமுக) கூறும்போது, “சேலம் மாநகராட்சி 58-வது வார்டில் அதிமுக வெற்றி பெறும் நிலையுள்ளது. இதனால், தேர்தல் உள்நோக்கத்துடன் திமுகவினர் அந்த வார்டுக்கு தொடர்பில்லாத நபர் மூலம் பொய் புகார் கொடுத்து பாண்டியனை கைது செய்துள்ளனர்” என்றார்.
இதனிடையே, அதிமுக-வினரின் மறியல் போராட்டத்தால், அன்னதானப்பட்டி மெயின் ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.