க்ரைம்

ரயிலில் கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ரயிலில் கடத்த முயன்ற சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ரயிலில் கஞ்சா கடத்திச் செல்பவரை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் மதுசூதனன் தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுஇருந்தனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் டி கால் மற்றும் சமந்தா பிரதான் என்பதும், அவர்களிடமிருந்த பையில் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 9.7 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரூ.1.94 லட்சம் மதிப்புடையது என்று ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தெரிவித்தனர்.

இதேபோல, கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் டாட்டா எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை பெரம்பூரில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, ஒரு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது தூய்மைப் பணியாளருக்கு தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்பேரில் வந்த போலீஸார், பையைச் சோதனையிட்டனர். அதில், ரூ.1.42 லட்சம் மதிப்பிலான 7.1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், அதைக் கடத்தி வந்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT