நாகர்கோவில்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து மகளில் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் கண்மணி, மற்றும் அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று சோதனை நடத்தினர். இதில் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம், மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்மணி. இவர் ஏற்கெனவே குமரி எஸ்.பி. அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்தார். இவரது கணவர் சேவியர் பாண்டியன் குமரி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக உள்ளார். கண்மணி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர் புகார்கள் சென்றன. அத்துடன் நாகர்கோவிலில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வரும் இவரது தோழி அமுதா என்பவரும் சமீப காலமாக அதிக அளவில் பணம் புழக்கத்தில் விட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நாகர்கோவில் கீழராமன்புதூரில் உள்ள காவல் ஆய்வாளர் கண்மணி வீட்டில் இன்று காலை சோதனை நடத்தினர்.
அப்போது கண்மணி, அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். சோதனையின்போது வீட்டில் இருந்த ஆவணங்களை சரிபார்த்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், சில ஆவணங்களை கைப்பற்றினர். கண்மணி வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் மீனாட்சி கார்டனில் உள்ள கண்மணியின் தோழி அமுதாவின் வீட்டிலும் லஞ்சஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இரு இடங்களிலும் நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம், மற்றும் முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் கூறுகையில், “பெண் காவல் ஆய்வாளர் கண்மணி மீது வந்த தொடர் புகாரை தொடர்ந்து அவர் வீட்டிலும், தோழி அமுதா வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் கண்மணி வீட்டில் இருந்து ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம், ரூ.90 லட்சம் மதிப்புள்ள வைப்பு தொகைக்கான வங்கி ஆவணங்கள், மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அமுதா வீட்டில் இருந்து சொத்து பத்திரம் பேரில் கடன் கொடுத்ததற்கான பல ஆவணங்களும், 8 லட்சத்திற்கு மேல் நகை வாங்கியதற்கான ரசீதும், பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.
ஒரே நேரத்தில் ஆய்வாளர் கண்மணி, அவரது தோழி அமுதா ஆகியோர் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.