க்ரைம்

அம்பாசமுத்திரம் அருகே மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப், 5 பாதிரியார்களுக்கு 2-வது முறையாக ஜாமீன் மறுப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள மாநிலம் பத்தனம்திட்டா கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் மற்றும் 5 பாதிரியார்களின் ஜாமீன் மனுவை, 2-வது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் பத்தனம்திட்டா சீரோ மலங்கரா டயோசீசனுக்கு சொந்தமான 300 ஏக்கர் இடம் உள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த மனுவல் ஜார்ஜ் என்பவருக்கு கடந்த 2019-ம் ஆண்டில் டயோசீசன் சார்பில் 5 ஆண்டுகளுக்கு இந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டது.

அங்கு, எம்.சாண்ட் குவாரிக்காக அனுமதி பெற்ற மனுவல் ஜார்ஜ், அருகில் உள்ள வண்டல் ஓடை பகுதியில் இருந்து ஆற்று மணலைஅளவுக்கு அதிகமாக எடுத்து கடத்தியதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அப்போதைய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீப் தயாள் ரூ.9.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். மனுவேல் ஜார்ஜ் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா சீரோ மலங்கரா கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் சாமுவேல் மார் ஏரேனியஸ்(69), மறை மாவட்ட முதன்மை குரு ஷாஜி தாமஸ் (58), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56), ஜிஜோ ஜேம்ஸ் (37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலாயில் (53) ஆகிய 6 பேரையும் சிபிசிஐடி போலீஸார், கடந்த 5-ம் தேதி இரவு கைது செய்தனர்.

இவர்களில் பிஷப் மற்றும் ஜோஸ் சமகால ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிஷப் உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கேட்டு திருநெல்வேலி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் கடந்த 9-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இவர்கள் 6 பேரும் திருநெல்வேலி மாவட்ட 1-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மீண்டும் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்து, இம்மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

SCROLL FOR NEXT