விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி, 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு, வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய தாயார் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அச்சிறுமி தாய்மை அடைந்து இருப்பதாக உடன் வந்தவர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியை விசாரித்ததில் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்தச் சிறுமியை அவரது தந்தை கோவிந்தன் ( 44) மற்றும் அவரது நண்பரான வி.சாத்தனூரை சேர்ந்த கந்தகோணி என்கிற முனுசாமி (48) ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோவிந்தன், கந்தகோணி என்கிற முனுசாமி ஆகிய இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.