திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே குட்கா கடத்திய பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, துறையூர் பாலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் 3.8 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன. அதைத்தொடர்ந்து இவற்றைக் கடத்தி வந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, துறையூர் அருகேயுள்ள ஓ.கிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்குமார் (37) என்பதும், இவர் பாஜக திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும்படை சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் அளித்த புகாரின்பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.