ஆவடி: அம்பத்தூரில் குழந்தை `லாக் டவுன்’ யை கடத்தியது தொடர்பாகக் கட்டுமானப் பொறியாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தச்சுப்பணிகளில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்(38) ஈடுபட்டு வருகிறார். இவர் தங்கியிருந்த குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த அவரின் `லாக் டவுன்’ என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த 6-ம் தேதி காணாமல் போனது.
இதுகுறித்து, கடந்த 7-ம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் குழந்தையைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி இரவு, சென்னை- கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்றிருந்த சேலம் செல்லும் பஸ்ஸில் குழந்தையை யாரோ விட்டுச் சென்றுள்ளனர். அந்த குழந்தையை கோயம்பேடு போலீஸார் கைப்பற்றி அம்பத்தூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பெற்றோரிடம் குழந்தை ஒப் படைக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தை `லாக் டவுன்’-ஐ கடத்தியது தொடர்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்(28) என்ற கட்டுமான பொறியாளர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி சுஷாந்த் பிரதான் ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக அம்பத்தூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது:
குழந்தையை பஸ்ஸில் விட்டுச் சென்றவரை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், ரயில் விகார் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணி மேற்பார்வையாளரான பாலமுருகன், தன்னுடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் சுஷாந்த் பிரதான் உதவியுடன் குழந்தையைக் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் பதுங்கி இருந்த பாலமுருகனும், சென்னையில் சுஷாந்த் பிரதானும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்ட விசாரணையில், ``பாலமுருகன், தன்னுடன் படித்தவர்களுக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில், தனக்குத் திருமணம் ஆகாததாலும், குழந்தைகள் மீது இருந்த ஆசையாலும், சுஷாந்த் பிரதான் உதவியுடன் குழந்தையைக் கடத்தி, கடலூரில் வசிக்கும் தனக்கு அறிமுகமான வளர்மதி(54) வீட்டுக்குச் சென்று குழந்தையை வளர்க்கச் சொல்லிக் கேட்டுள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டதால் கோயம்பேட்டில், சேலம் பஸ்ஸில் விட்டுச் சென்றுள்ளார்’’ என்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், குழந்தையை மீட்கும் பணி, கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்ட அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான 13 பேர் கொண்ட தனிப்படையினரைப் பாராட்டி, சன்மானம் மற்றும் நற்சான்றிதழ்களை காவல் ஆணையர் வழங்கினார்.
மேலும், குழந்தை `லாக் டவுன்' மற்றும் அவரது பெற்றோருக்குப் பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.