திருப்பூரில் பெண்ணின் சடலத்தை சூட்கேஸில் அடைத்து வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லும் இரு மர்மநபர்கள் யார் என்பது குறித்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை எம்.புதுப்பாளையம் நீலிக்காடு பகுதியில் கடந்த 7-ம் தேதி சாக்கடைக் கால்வாயில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சூட்கேஸ் கிடப்பதாக, நல்லூர் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்று சாக்கடையில் கிடந்த சூட்கேஸை கைப்பற்றிய போலீஸார், அதை திறந்து பார்த்தனர். அதில், 25 வயதுடைய பெண்ணின் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது, தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து, கொலையாளிகளை போலீஸார் தேடிவந்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் கடந்த 6-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், தொடர்புடைய சூட்கேஸை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து கேவிஆர் நகர், ஏபிடி சாலை, கருவம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் நல்லூர் தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.