அரக்கோணம்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலலை தொடர்ந்து அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயில் அங்கு வந்தது. ரயில் பெட்டிகளில் ரயில்வே காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரின்றி 3 பைகள் இருந்தன.
அந்த பைகளை கைப்பற்றி சோதனையிட்ட போது அதில் 13 கிலோ 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ரயில் மூலம் கஞ்சா கடத்திச்செல்வது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர் அவற்றை வேலூர் போதை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினரிடம் ஒப்படைத்து ரயிலில் கஞ்சா கடத்திச்செல்லும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.